தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக மத்திய அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் ஏற்கனவே சட்ட ஆலோசனை வழங்கி உள்ளதாகவும், அதனால் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முறையிட்டார். நீதிபதிகள் இதனை ஏற்று இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் சிங் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான ரஞ்சித் சிங், சட்டமன்ற விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முகாந்திரம் இல்லை என்றும், தன்னுடைய கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய விரும்புவதாகவும் கூறினார். மனுதாரர் தரப்பு வக்கீல் கோபால் சுப்பிரமணியம், தங்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை இரு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்டு 9-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகவில்லை. மனுதாரர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை கோர்ட்டில் வக்கீல் தாக்கல் செய்தார். தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், சென்னை ஐகோர்ட்டில் இதே விவகாரம் தொடர்பாக 4 மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றும், அதன் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவெடுக்கும் வரை பாண்டியராஜனின் மனுவை விசாரிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான வக்கீல் ரவி சில ஆவணங்களை தாக்கல் செய்து, தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த மனு குறித்தும் செப்டம்பர் 21-ந் தேதிக்கு முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.