வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழக கட்லோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதிசை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:’மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அங்கு நிலவுகிறது.. தமிழகத்தில் வெகு தொலைவில் அது நிலவுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அது மேலும் 240 மைல் தொலைவில் மசூலிப்பட்டினம் அருகே உள்ளது. வடதிசை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு மழை குறையும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் அதாவது 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பிட்ட சில இடங்களில் மழை இருக்கும்”.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.