தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடியரசுதலைவர் கார் விவரங்களை தர மத்திய அரசு மறுப்பு

CARயு டியுப்’ வலைத்தளத்தில், “ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயன்படுத்தும் கார் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் எஸ் 600 (டபிள்யூ 221) புல்மேன் கார்ட், கவச வாகனம், உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டது. ராணுவ துப்பாக்கி சூட்டில் இருந்து காத்துக்கொள்ளும் வசதி கொண்டது. கையெறி குண்டுகள், வெடிபொருட்களால் சேதப்படுத்த முடியாதது. முன்னாள் ஜனாதிபதியின் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் டபிள்யூ 140 காரும் கூடுதலாக உள்ளது” என தகவல்கள் வெளியாகின.

 

இந்த தகவல்கள் பல ஊடகங்களிலும் வெளியாகின.

 

இதை உறுதி செய்துகொள்ளும் ஆர்வத்தில் ராகேஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஜனாதிபதி அலுவலகத்துக்கு மனு செய்தார். அதில் அவர், ஜனாதிபதி பயன்படுத்தும் அரசு சின்னம் பொருத்தப்பட்ட கார்கள் என்ன தயாரிப்பு, என்ன மாடல், அவற்றின் பதிவு எண்கள் என்னென்ன என்பதையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அது மட்டுமின்றி ஜனாதிபதி மாளிகையில் உள்ள அனைத்து கார்கள், துணை ஜனாதிபதியின் கார், அனைத்து மாநில கவர்னர்கள் உள்ளிட்டவர்களின் கார்கள் பற்றிய விவரங்களையும் அளிக்குமாறு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை ஜனாதிபதி அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கும், கருத்துக்கும் அனுப்பியது. ஆனால் ஜனாதிபதியின் கார் பற்றிய விவரங்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையவை, அவற்றை தெரிவித்தால் அது ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் தர மறுத்து விட்டது.

 

இதுதொடர்பான விளக்கத்தில், “இத்தகைய தகவல்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 8 (1) (ஏ) மற்றும் (ஜி) படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை வெளியிட்டால் அது நாட்டின் இறையாண்மைக்கும், பயன்படுத்துகிற தலைவரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும்” என கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த விளக்கத்தை மத்திய தலைமை தகவல் கமிஷனர் ராதாகிருஷ்ண மாத்தூர் ஏற்று, ராகேஷ் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்தார்