கொழுப்பு சத்தை குறைக்கும் வெண்பூசணி!

ht4207

வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதற்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உள்ளன. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மை கொண்ட வெண் பூசணியின் பூ, காய், இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்பூசணியை பயன்படுத்தி இதயத்தை பலப்படுத்தும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

வெண் பூசணியின் தோலை நீக்கி துண்டுகளாக்கி 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இதனுடன், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால், இதயகோளாறு இல்லாமல் போகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதயம் ஆரோக்கியம் அடைகிறது. கல்லீரல் பலமடைகிறது. வெண் பூசணியில், ஊட்டசத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது.

வெண் பூசணியை பயன்படுத்தி அதிகளவிலான ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதலுக்கான மருந்து தயாரிக்கலாம். 100 மில்லி அளவு வெள்ளை பூசணி சாறு, சம அளவு மோர் சேர்த்து கலந்து குடிக்கவும். இது வெள்ளப்படுதலுக்கு மருந்தாகிறது. மாதவிலக்கு சமயத்தில் அதிகளவு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். அல்சர் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொண்டால் அல்சர் சரியாகும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வெள்ளை பூசணிக்கு உள்ளது. ரத்த மூலத்துக்கு மருந்தாகிறது.

உடல் தேற்றியாக பயன்படுகிறது. சத்தூட்ட பொருளாக விளங்குகிறது. வெள்ளை பூசணியின் விதைகளை பயன்படுத்தி சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.வெண் பூசணி விதைகள் 20 வரை எடுத்து லேசாக நசுக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தணியும். நீர்சத்து மிகுந்த வெண் பூசணியின் விதைகள் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரை எளிதாக வெளித்தள்ளும் தன்மை கொண்டது.

இலையை பயன்படுத்தி தோலில் ஏற்படும் தொற்றுகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்காலாம். 50 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் வெண் பூசணி இலை, பூவை நீர்விடாமல் அரைத்து சேர்க்கவும். தைலப்பத்தில் காய்ச்சி வடிகட்டி எடுத்து வைக்கவும். இதை தோலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசினால் அரிப்பு, தடிப்பு சரியாகும். பூஞ்சை காளான்களை போக்கும். படை, சொரியாசிஸ் ஆகியவற்று இந்த பூச்சு மருந்தாகிறது.

வெண்பூசணியை கொண்டு சாம்பார், மோர் குழம்பு வைக்கும்போது உணவுக்கு தனி சுவை கிடைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வெண் பூசணி கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உடல் எடையை குறைக்கும். வெண் பூசணி லேகியத்தை சாப்பிட்டுவர மெலிந்த உடல் பலம் பெறும். சதைப்பற்று ஏற்படும். சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உடல் எடை குறையும்.