‘ஓவியாவ விட்டா யாரு?’ விமர்சனம்

நாயகன் சஞ்ஜெய் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்து முடித்து சொந்த ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் சொந்தமாக தொழில் செய்து தொழிலதிபர் ஆகா நினைக்கிறார். அதற்காக ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து ஏமாறுகிறார்.பிறகு மண்ணுளி பாம்பு விற்கிறேன் என ஏமாற்றும் ராதாரவியுடன் சேர்ந்து (ஏமாற்று வேலை செய்கிறோம் என்று தெரியாமலேயே)  பேராசைக்காரர்களிடம் தொழில் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

பிறகு அந்த பணத்தை வைத்து என்ன தொழில் செய்து தொழிலதிபர் ஆகிறார்? என்னென்ன மோசடிகள் செய்து பணம் சம்பாதிக்கிறார்? ஏமாந்தவர்களிடம் எப்படி மாட்டிக்கொண்டு தப்பிக்கிறார்? என்பதே  ‘ஓவியாவ விட்டா யாரு?’ படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் சஞ்ஜெய் கதைக்கு என்ன தேவையோ  அதன்படி சரியாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பான பெர்பாஃமென்ஸ் என்றே சொல்லலாம்.‘பிக்பாஸ்’ ஓவியா, கிளாமரில் மட்டும் இல்லாமல் அழகாக நடித்துள்ளார். 
டத்தோ ராதாரவி மண்ணுளிப் பாம்பு விற்கும் (ஏமாற்றும்) வியாபாரியாக சிரித்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார். படத்தில் யானை நடித்திருக்கிறது, யானை பாகனாக  காமெடி நடிகர் செந்தில் நடித்துள்ளார்.
 
‘பருத்தி வீரன்’ சரவணன், சின்னி ஜெயந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், ரவிமரியா காமெடிக்கு பயன்பட்டுள்ளனர். எல்லா படத்திலும் ரவுடியாகவே வரும் அருள்தாஸ் இதில் கலெக்டர்.
 
‘றியா றியா பாக்குறியா’ பாடல் ரசிக்க வைக்கிறது.
 
பேராசைக்காரர்களை குறிவைத்துப் பணம் சம்பாதிக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கான படம் ‘ஓவியாவ விட்டா யாரு?’