மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 3 நாள் பயணமாக நேற்று ஈரான் சென்றடைந்தார். இந்நிலையில், இன்று அங்குள்ள குருத்வாராவிற்கு சென்று இந்தியர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் மத்தியில் பேசுகையில், ‘உங்களை சந்தித்த பிறகு ஒரு புதிய உத்வேகத்துடன் ஈரானில் என்னுடைய பயணத்தை துவங்கியிருக்கிறேன். நூற்றாண்டு காலமாக ஈரானுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது. இங்குள்ள இந்திய பள்ளிகளில் நடைபெற்று வரும் கலாச்சார நிகழ்ச்சிகளினால் ஈரானுடனான வரலாற்று உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஈரானில் வாழும் இந்தியர்கள் சந்தித்து வரும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஈரான் அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வுகள் காணப்படும்’ என உறுதியளித்தார்.அங்கு இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் சுஷ்மா சுவராஜ் உரையாடினார். அவரை வரவேற்க பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். ஈரானில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி 1955-ம் ஆண்டு இந்தியர்களால் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது