இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேனாவும், பிரதமர் தேர்தலில் வெற்றி கண்ட ரனில் விக்ரமசிங்கேவும் இணைந்து புதிய அரசியலமைப்பு கூட்டத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புதிய அரசியலமைப்பு கூட்டம் 1978-ல் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சாசனத்தை அகற்றுவதாக இருக்கும்.
இதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது தமிழர்கள் இடையே உருவாகி இருக்கிறது.இதுபற்றி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசும்போது, ‘‘நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கூட்டாட்சி முறையில் தீர்வு காணவேண்டும். இலங்கையில் தமிழர்கள் சமூக, பொருளாதார, கலாசார விஷயங்களை பாதுகாத்து வாழக் கூடிய நியாயமானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண கவுன்சிலர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியதாவது:-தேசிய அளவில் உருவாக்கப்பட இருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை என்ன என்பதை சம்பந்தன் கட்சி கூட்டத்தில் தெரிவித்தார். தற்போதைய இலங்கை அரசு, கூட்டாட்சி ஏற்பாட்டில் இன்னும் அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் அதேபோல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூர் தலைவர்கள் இதில் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒன்றுபட்ட இலங்கை என்னும் கூட்டாட்சி அமைப்பு முறையில் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையே நாங்கள் விரும்புகிறோம். கூட்டாட்சி முறையில் தீர்வு காண்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் சர்வதேச நாடுகள் மூலம் நெருக்கடி அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்