விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் அடித்த அதிரடி சதத் தால் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனே நகரில் நேற்று நடந்தது. டஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இதைத்தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராயும், ஹேல்ஸும் களம் இறங்கினர்.பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த புனே மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹேல்ஸ், 9 ரன்களில் அவுட் ஆனபோதிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராய், பவுண்டரிகளாக நொறுக்கித் தள்ளி இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 17.2 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். 61 பந்துகளைச் சந்தித்த ராய் 12 பவுண்டரிகளுடன் 73 ரன்களைக் குவித்தார்.ராய் அவுட் ஆன பிறகும் இங்கிலாந்து அணியின் ரன் எடுக்கும் வேகம் குறையவில்லை. ஒருபுறம் ரூட் நிலையாக நின்று மட்டையைச் சுழற்ற, மறுபுறம் மோர்கன் (28 ரன்கள்), பட்லர் (31 ரன்கள்) ஆகியோர் அவருடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தின் ரன் ரேட் சரியாமல் பார்த்துக் கொண்டனர். 41.4 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 244 ரன்களாக இருந்தபோது பும்ராவின் பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ரூட் (78 ரன்கள்) ஆட்டம் இழந்தார்.ரூட் ஆட்டம் இழந்ததும் இங்கி லாந்தின் ரன் ரேட் கட்டுப்படும் என்று இந்திய வீரர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அந்தக் கனவை ஸ்டோக்ஸ் தவிடு பொடியாக்கி னார். 40 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் ஸ்டோக்ஸ் 62 ரன்களை குவிக்க, இங்கிலாந்தின் ஸ்கோர் றெக்கை கட்டிப் பறந்தது. அவருக்கு துணையாக மொயின் அலியும் (28 ரன்கள்) அதிரடியாக ஆட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களை குவித்தது இங்கிலாந்து. இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 115 ரன்களை விளாசியது.இப்போட்டியில் இந்திய பந்துவீசாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக 7 ஓவர்களை மட்டுமே வீசிய உமேஷ் யாதவ் 63 ரன்களையும், 10 ஓவர்களை வீசிய பும்ரா 79 ரன்களையும் அள்ளிக்கொடுத்தார்.வெற்றிபெற 351 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அடி சறுக்கியது. ஸ்கோர் 24 ரன்களை எட்டுவதற்குள் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவனும் (1 ரன்), கே.எல்.ராகுலும் (8 ரன்கள்) ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி பதறியது.கடந்த காலங்களில் பலமுறை அணியை இக்கட்டில் இருந்து மீட்ட யுவராஜ் சிங்கும், தோனியும் இம்முறையும் காப்பாற்றுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொய்த்துப் போனது. 15 ரன்களை மட்டுமே எடுத்து யுவராஜ் சிங்கும், 6 ரன்களில் தோனியும் நடையைக் கட்ட 4 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்று படு பாதாளத்தில் விழுந்தது இந்தியா.மூத்த வீரர்கள் கைவிட்ட நிலையில் கேதார் ஜாதவுடன் சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டார். தொடர்ந்து விக்கெட்களை இழக்காமல், அதே நேரத்தில் ரன் ரேட்டையும் சரியாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடி, இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தது. 93 பந்துகளில் கோலியும், 65 பந்துகளில் கேதார் ஜாதவும் சதங்களை விளாச இங்கிலாந்தின் வெற்றிமுகத்தில் பிரகாசம் குறைந்தது.5-வது விக்கெட்டுக்கு 146 பந்துகளில் 200 ரன்களை அடித்த இந்த ஜோடியை ஸ்டோக்ஸ் பிரித்தார். 122 ரன்களை எடுத்த கோலி, ஸ்டோக்ஸின் பந்தில் வில்லியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் கேதார் ஜாதவ் 120 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டம் மீண்டும் இழுபறி நிலைக்கு வந்தது. ஜடேஜா – பாண்டியா ஜோடி இந்தியாவை கரைசேர்க்க போராடியது. ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை. ஜடேஜா – பாண்டியா ஜோடி நிதானமாக இலக்கை நெருங்கியது.வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா அவுட் ஆக மீண்டும் பதட்டம் கூடியது. ஆனால் பொறுமை இழக்காமல் நில்தானமாக ஆடிய பாண்டியா (40 ரன்கள்) இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார் 48.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது.