ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்சுக்கு எதிரானஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி நிர்ணயித்த 144 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு விக்கெட்டுகள் கணிசமாக சரிந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் நிலைத்து நின்று, ஆபத்பாந்தவனாக கைகொடுத்தார்.
கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது, பவுண்டரி அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். குஜராத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். கடைசி பந்தில் ஒரு அணி வெற்றி பெறுவது ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இது 18-வது நிகழ்வாகும். ஆரோன் பிஞ்ச் 67 ரன்கள் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்து ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார். முன்னதாக முதல் இரு ஆட்டங்களிலும் இவர் அரைசதங்களுடன் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குஜராத் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி நிருபர்களிடம் கூறும்போது, ‘ஆரோன் பிஞ்ச் லேசான தசைப்பிடிப்பால் (18-வது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் ஓடிய போது இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடினார்) அவதிப்பட்டார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்பினோம். அது போலவே அவர் மனஉறுதியுடன் விளையாடி தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார். நான் பார்த்தமட்டில் மிகச்சிறந்த இன்னிங்சில் ஒன்றாக ஆரோன் பிஞ்சின் ஆட்டத்தை கருதுகிறேன். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி கடைசி வரை அவர் போராடிய விதம் அபாரமானது’ என்றார்.