தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தை பிரசாரத்தின்போது பயன்படுத்த மாட்டோம் என்று, மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்.
விஜயகாந்த் படத்தையும், தேமுதிக கொடி, கரை வேட்டியை மக்கள் தேமுதிக பயன்படுத்தக் கூடாது என தேமுதிக வழக்குரைஞர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமாரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:
மக்கள் தேமுதிக அமைப்பு தொடங்குவதற்கு முன்பே எங்களது நிலையைத் தெளிவாக சொல்லிவிட்டோம். தேமுதிகவையோ, முரசு சின்னத்தையோ முடக்கும் இழிவான செயலில் ஈடுபடமாட்டோம் எனக் கூறியிருந்தேன். அதன்பிறகும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எனக்கு தேமுதிக வழக்குரைஞர்கள் நோட்டீஸ் அனுப்பினர்.
மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்த பின்னர் இதுபோல நோட்டீஸ் அனுப்பியது கேலிக்கூத்தாக இருக்கிறது. விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்த நாங்கள் முட்டாள்கள் அல்ல. தேமுதிக கொடியையும் பயன்படுத்தமாட்டோம். அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக என்னை வம்புக்கு இழுக்கின்றனர்.
அதேநேரத்தில் கருப்பு, மஞ்சள், சிவப்பு கொண்ட கரை வேட்டியைத்தான் நாங்கள் கட்டுவோம். அந்தக் கரை வேட்டியை கட்டக் கூடாது என எங்களை யாரும் நிர்பந்திக்கக் கூடாது. புதிய நீதிக் கட்சி, லட்சிய திமுக ஆகியவை இதே கரை கொண்ட வேட்டியைத்தான் கட்டி வருகின்றனர்.
கட்சிக் கொடி, கட்சியின் பெயருக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் காப்புரிமை வழங்கியுள்ளது. சிவப்பு, மஞ்சள், கருப்பு தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் என காப்புரிமை வழங்கவில்லை. எனவே, இந்தக் கரை வேட்டியை கட்டக் கூடாது என என்னை யாரும் நிர்பந்திக்க வேண்டாம் என்றார்.