நரேந்திர மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. விளங்குகிறது.
ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.