மதுரையில் பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட கணவன் கைவிட்டு சென்றதால் செய்வதறியாது தவித்து வருவதாக 2 மாத கர்ப்பிணி பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சத்யா. அழகுகலை பட்டய படிப்பு முடித்த அவர் அப்பகுதியில் ப்யூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். அதற்கு விளம்பரம் செய்வதற்காக பேஸ்புக்கில் சத்யா அழகு கலை தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதை கண்ட மேலூர் தற்காகுடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் பேஸ்புக் மூலம் சத்யாவுடன் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழக தொடங்கிய இருவரும் பின்பு பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சத்யா கர்ப்பமாக, அவருக்கு தெரியாமல் கணவர் உதயகுமாரை அவரது தந்தை பாண்டிகுமார் பிரித்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கணவரை காணாமல் தவித்த சத்யா போலீசில் புகார் அளித்தார். உதயகுமாரை அழைத்து போலீசார் விசாரித்த போது, தாயை பார்க்க ஊருக்கு போவதாகவும், 4 நாட்களில் திரும்பி வந்து மீண்டும் சத்யாவுடன் சேர்ந்து வாழ்வதாகவும் எழுதி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
ஆனால் பல நாட்களாகியும் அவர் திரும்பி வராததால் கணவர் உதயகுமாரை தேடி அவரது வீட்டிற்கு சத்யா சென்றுள்ளார். அங்கு உதயகுமாரின் தந்தை பாண்டிகுமார் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். உதயகுமாரை செல்லமாக வளர்த்ததாகவும், 30 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் சத்யாவுடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாகவும் கூறி பாண்டிகுமார் மிரட்டியுள்ளார்.
இதனால் செய்வதறியாது தவித்த சத்யா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் பழகி பெண்களை ஏமாற்றும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெண்களும் ஏமாந்து வாழ்க்கையை பாழ்படுத்தி கொள்வது தொடர்கதையாகி வருகிறது