நல்லெண்ண முயற்சியாக, வட கொரியாவுக்கு நோபல் பரிசு பெற்ற மூவரை அனுப்பி மாணவர்களிடையே உரையாற்றச் செய்ய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.வியன்னாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் “சர்வதேச அமைதி அறக்கட்டளை’ என்ற அந்த அமைப்பு, அந்த மூன்று அறிஞர்களையும் இந்த மாத இறுதியில் வட கொரியாவுக்கு அனுப்பவிருப்பதாகத் தெரிவித்தது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:பொருளாதாரம், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெற்ற மூன்று பேரை, வட கொரியாவுக்குச் சுற்றுப் பயணம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.அந்த மூவரும் நார்வே, பிரிட்டன், இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர்கள், அந்த நாட்டின் முக்கிய கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே உரையாற்றுவார்கள்.அவர்களது உரைகள் முழுக்க முழுக்க அறிவியல் தொடர்பானதாகவே இருக்கும்.அரசியல் விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச மாட்டார்கள்.இந்தச் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக அறக்கட்டளையின் நிறுவனர் யுவே மோராவெட்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 முறை வட கொரியாவுக்குச் சென்றுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கொரியா அண்மையில் நிகழ்த்திய ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையைத் தொடர்ந்து, அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொண்டிருக்கும் வேளையில் சர்வதேச அமைதி அறக்கட்டளை இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.