நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் – ரகுல் ப்ரீத் சிங்

செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும், ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.

இப்படத்தில் வரும் ‘அன்பே பேரன்பே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். 

பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்கு சென்று தான் பார்ப்பேன். இப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் தான் பார்ப்பேன்.