ஜோசப் குருவில்லா (விஜய்). அவரது ஒரே சொந்தம் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நைனிகா. விஜய்யின் எளிமையைப் பார்த்து அவரைக் காதலிக்கிறார் பள்ளி ஆசிரியை எமி. ஒரு சூழ்நிலையில் ஜோசப் குருவில்லாவின் உண்மையான அடையாளம் தெரியவருகிறது. அவர் ஏன் மறைந்து வாழ்கிறார்? அவருடைய கடந்த கால பிரச்சினைகள் திரும்ப வரும்போது எப்படிச் சமாளிக்கிறார் என்பதே ‘தெறி’யின் கதை.
தொண்ணூறுகளில் வந்த சில வெற்றிப் படங்களின் சாயல் கொண்ட கதையில் விஜய்யைப் பொருத்தி, குடும்ப நாடகத்தில் இணைத்துக் கொடுக்க முயன்றிருக்கும் இயக்குநர் அட்லீ, அதில் ஓரளவு வெற்றி பெறுகிறார். தந்தை மகள், அம்மா மகன், காதலன் காதலி ஆகிய உறவுகளை நேர்த்தியாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர், நாயகன் வில்லன் விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். வில்லனின் பழிவாங்கலும் அதன் தொடர்ச்சியும் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் துளியும் இல்லை.
ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்ற வாளியைக் கண்டறியும் போலீஸ் அதிகாரி விஜயகுமார், குற்றவாளியின் தந்தையிடம் “அவனை நான்தான் கொன்றேன்” என கெத்தாகக் கூறும் காட்சி அவரது ரசிகர்களால் விசிலடித்து, ரசிக்கப்படுகிறது. இந்த ஒரு இடத்தில் இயக்குநர் தன் ‘ஆக்ஷன்’ பட முத்திரையைப் பதிக்கிறார். ஆனால், அதையடுத்து வரும் சராசரியான பழிவாங்கும் படலம், வழக்கமான ஹீரோயிஸம் ஆகியவை ஏமாற்றமளிக்கின்றன.
சமந்தாவிடம் விஜய் அன்பாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்துவிடுகிறது. இது போலவே எல்லாத் திருப்பங்களும் முன் கூட்டியே தம்மை அறிவித்துக்கொண்டு விடுகின்றன. எதிர்பாராத திருப்பங்களிலோ நம்பகத்தன்மை இல்லை. கேரளாவில் இருக்கும் ஜோசப் அடுத்த சில மணிநேரங் களில் சென்னையில் விஜயகுமாராக அவதாரம் எடுக்கிறார். கிளைமாக்ஸில் 10 விநாடி களுக்குள் வில்லனை அடித்துக் கொன்று தொங்கவிடுகிறார். பள்ளிப் பேருந்து தன் கண்ணெதிரில் ஆற்றுக்குள் விழுந்ததும் விஜய் ஓடி வந்து ஆற்றுக்குள் மூழ்கி எழுவதற்குள் அங்கே மீட்புக் குழு, மருத்துவ முகாம், பெற்றோர்கள் என அத்தனை பேரும் குவிந்துவிடும் நம்பமுடியாத அதிசயம் நடந்துவிடுகிறது.
அரசுப் பள்ளியை ஆக்கிரமித்திருக்கும் ரவுடிகளை விஜய் கையாளும் காட்சியை காமெடி என்று நினைத்து இயக்குநர் உருவாக்கியிருக்கலாம். பார்ப்பவர்களுக்கு அழுகைதான் வருகிறது. இரவில் தன்னோடு மோதியவர்களைப் பகலில் விஜய் சந்திக்கும் காட்சி நன்றாக அமைந்திருக்கிறது. ராஜேந்திரனுக்கும் விஜய்க்கும் நடக்கும் உரையாடல்கள் சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளன.
பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரி, பிரியத்தைக் கொட்டும் காதலன் என்று மூன்று விதமான வண்ணங்களைக் காட்டி விஜய் ஜமாய்த்திருக்கிறார். காட்சிக்கேற்ற விதத்தில் உடல் மொழியில் வித்தியாசம் காட்டுகிறார். பாவம், இயக்குநர் மகேந்திரன். அவருக்கு நடிப்பதற்கென்று பெரிதாக எதுவுமில்லை.
சமந்தா, பேபி நைனிகா, ராஜேந்திரன் ஆகியோர் படத்துக்கு வண்ணம் சேர்க் கிறார்கள். நைனிகா எல்லாக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சமந்தா தன் அழகினாலும் தேர்ந்த நடிப்பினாலும் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். மொட்டை ராஜேந்திரன் அடக்கிவாசித்துச் சிரிக்க வைக்கிறார்.
இரண்டு மூன்று காட்சிகளில் தலையைக் காட்டிவிட்டுப் போகும் எமிக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்பது தெரியவில்லை.
பாடல்களைப் படமாக்குவதில் தனது குரு ஷங்கரின் முத்திரைகள் அட்லீயிடம் தெரிகின்றன. மனித உறவுகளின் மென் சித்திரங்களைத் திரையில் வடிக்கும் நுட்பமும் அவருக்குக் கைவந்திருக் கிறது.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன் இருவருமே படத்துக்குப் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறார்கள். அட்லீயும் ரமண கிரிவாசனும் சேர்ந்து எழுதியுள்ள வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. “அவர்களுக்குப் புரியும் பாஷையில் சொல்ல வேண்டும்” என்னும் வசனம் வன்முறையை நியாயப்படுத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது. தனது 50-வது படமான ஜி.வி.பிரகாஷ் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறார்
கிளைமாக்ஸில் “நான் ஒரு நல்ல அப்பா” என்கிறார் விஜய்.