திமுக எப்போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்குவது நீங்கள் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, “இதற்கு மீண்டும் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை” என்றார்ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்து இருக்கிறதா? என்றதற்கு, “முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்ததில்லை. பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அரசுக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகளின் அடிப்படையில், சில கொள்கைகளின் அடிப்படையில், சில சட்ட முன் வடிவுகள் கொண்டு வந்தபோது ஆதரவு தெரிவித்தோம் என்பது மட்டும்தான் உண்மை” என்றார்.ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளது குறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதே நாங்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினோம். அவர் மரணமடைந்த பிறகு மக்களிடத்தில் பலவித சந்தேகங்கள் நிலவி வருகின்றன, எனவே இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.