234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மும்முரமாக செய்து வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கடைசி தேதி இன்றுடன்(நேற்று)முடிந்து விட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆன்லைனில் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்க ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர். மீதி பேர் திருத்தம், தொகுதி மாற்றம் ஆகியவற்றுக்காக விண்ணப்பித்து உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு மட்டும் வண்ண அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்கள் ரூ.25 செலுத்தினால் வண்ண அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி 24-ந் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி மே 1-ந் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பாகவும் அளிக்கப்படும்.ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு செலவின பார்வையாளர் வீதம் 234 செலவின பார்வையாளர்களும், பறக்கும் படையில் இடம் பெறும் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 118 பார்வையாளர்களும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பார்வையாளர் வீதம் 33 போலீஸ் பார்வையாளர்களும் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார்கள் .அந்த வகையில் மொத்தம் 385 மத்திய பார்வையாளர்கள் வருகிறார்கள் என ராஜேஷ் லக்கானி கூறினார்.