கேரளாவில் வண்ணத்திமூலா பகுதியில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் இன்று நடந்த மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கர்நாடகாவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீது 307 (கொலை முயற்சி) பிரிவின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மே 16ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு கட்சி தொண்டர்களிடையே மாநிலத்தில் பல பகுதிகளிலும் மோதல் நடந்து வருகின்றன.
ஆலப்புழாவின் ஏவூர் பகுதியில் டி.ஒய்.எப்.ஐ. தொண்டர்கள் தாக்கியதில் கடந்த மார்ச் 15ந்தேதி இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பலியானார். திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாரதீய ஜனதா மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்களிடையே கடந்த மார்ச் 14ந்தேதி நடந்த மோதலில் பாரதீய ஜனதா மாநில தலைவர் முரளீதரன் உள்பட குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.இதேபோன்று கண்ணூர் மாவட்டத்தின் பப்பினசேரி பகுதியில் கடந்த மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இதே மாவட்டத்தில் பனூர் பகுதியில் நடந்த தாக்குதலில் பாரதீய ஜனதா தொண்டர் ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த இரு தாக்குதல்களையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தினர்