கடனை திருப்பி செலுத்தாத பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லை என்றும் ஜேட்லி தெரிவித்தார்.இது தொடர்பாக தன்னுடைய வலைப்பூவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: வாராக்கடன் விஷயத்தில் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. யாருடைய காலத்தில் வாராக்கடன் அதிகரித்தது என் பது கவனிக்கப்பட வேண்டும். 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் சரியாக திரும்பி செலுத்தப்படவில்லை.
வாராக்கடனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டது என வதந்தி பரப்புபவர்களிடம், யார் கட்டளையின் படி இவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது என கேள்வி கேட்க வேண்டும். மேலும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது அப்போதைய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி கேட்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, அந்த நிறுவனங்களை வகைப்படுத்தும் விதிமுறைகளை அப்போதைய அரசு தளர்த்தியது.2015-ம் ஆண்டு வாராக்கடன் குறித்து முழுமையாக தெரிவி த்து, அதற்குரிய ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் வாராக்கடன் தொகை மிகவும் அதிகரித்தது. ரூ.4.54 லட்சம் கோடி வாராக்கடனாக இருக்க வேண்டிய தொகை, வாராக்கடன் பட்டியலில் இருந்து வெளியே வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை அடையாளப் படுத்தினோம்.தற்போதைய அரசு வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு எந்தவிதமான தள்ளுபடியையும் வழங்கவில்லை. கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 முக்கிய நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டுமே ரூ.1.75 லட்சம் கோடி. இந்த நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய பணி பல கட்டங்களாக நடந்து வருகிறது.