ஐ.சி.சி. மூலம் கிடைக்கும் வருவாயை குறைக்க ஷசாங் மனோகர் முயற்சிப்பதாக வழக்கு:வாபஸ் பெறும்படி உயர்நீதிமன்றம் அறிவுரை

ICC_LOGOசி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஆர்.கே.ராகவன் உட்பட 8 பேர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 

கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலமும், ஸ்பான்சர் மூலமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது. ஐ.சி.சி.க்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 80 சதவீதம், இந்தியாவில் இருந்து செல்கிறது.

 

எனவே, கிடைக்கிற வருவாயை மற்ற நாடுகளுக்கு வழங்குவதுபோல, இந்தியாவிற்கும் சமமாக பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட மற்ற 9 நாடுகளின் மொத்த மக்கள் தொகை, இந்தியாவின் 50 சதவீத மக்கள் தொகையை விட குறைவு என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது. பின்னர், பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவரான சீனிவாசன், தனது பதவிக்காலத்தில் ஐ.சி.சி. தனது வருவாயில் 21 சதவீதத்தை இந்தியாவிற்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தார்.

 

இதன் மூலம் 2015 முதல் 2023-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 400 கோடியும், 2023-2031 காலகட்டத்தில் ரூ.6 ஆயிரம் கோடியும் என்று மொத்தம் ரூ.9 ஆயிரத்து 400 கோடி இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலமாக கிடைக்கும்.

 

தற்போது பி.சி.சி.ஐ. தலைவராக ஷசாங் மனோகர் உள்ளார். இவர், ஐ.சி.சி. தனக்கு கிடைக்கும் வருவாயை இந்தியாவுக்கு பிரித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ள 21 சதவீதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் நம் நாட்டிற்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். பி.சி.சி.ஐ. முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஐ.சி.சி. மூலமாக இந்தியாவிற்கு வரும் வருவாயை குறைக்கக்கூடாது என பி.சி.சி.ஐ.க்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தன.

 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒரு யூகத்தின் அடிப்படையில் பொதுநல வழக்குகள் தொடர முடியாது. எனவே, இந்த மனுவை திரும்பப் பெறுகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு மனுதாரர் வக்கீல், மனுவை திரும்பப்பெற யோசித்து முடிவு எடுக்க ஒரு நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இதையடுத்து இந்த வழக்கை 20-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.