ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 60 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட பெயர்களின் விவரத்தை வெளியிட முடியாது என விசாரணை ஆணையம் கூறியுள்ளது. பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் ஏராளமான புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்றுக்கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அரசுக்கு 3 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் அரசு உத்தரவிட்டிருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் அளிப்பவர்கள் நேரிலோ, பதிவு தபால் மூலமாகவோ நவம்பர் 22-ம் தேதிக்குள் தகவல்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 25 பிரமாண பத்திரங்கள், 70-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளன. இதனையடுத்து அரசு மருத்துவர்கள் 2 பேர் நேரில் ஆஜராக கடந்த சில நாட்களுக்கு முன் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. திமுக டாக்டர் சரவணன் சமீபத்தில் ஆஜராகி, ஜெயலலிதா இறந்த பிறகே அவரிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது என கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் அடுத்த கட்டமாக 60 பேருக்கு சம்மன் அனுப்பி இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.