அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார். ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்தின் பேரில் சஞ்சிதா ஷெட்டியுடன் ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகவே, அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதை அறியும் கதிர், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார். இறுதியில், பரத், கதிர் இருவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை இதுவரை தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள்தான் பெயரளவிற்கு வைத்திருந்தார்கள். குதிரை பந்தயத்தை மையமாக வைத்து முழுநீள படமாக இதுவரை எடுத்ததில்லை. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காகவே இயக்குனர் அருண் கிருஷ்ணசாமியை பாராட்டலாம். குதிரை பந்தயத்துக்கு பின் இருக்கும் அரசியல், பந்தயத்தில் வெல்லத் தேவையான சாதுர்யம் ஆகியவற்றை கதையாக்கி, குழப்பாத திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். நாயகன் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பந்தயத்தில் பணத்தை இழந்தாலும் அதை மீட்பதற்காக இவர் சாதுர்யமாக காய் நகர்த்தும் பாணி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பெண்களை கண்டாலே எட்டி நிற்கும் கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அசத்துகிறது. அதேநேரத்தில், ஒரு பெண்ணுக்காக அவர் படும் கஷ்டங்களையும் படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார். நாயகிகளான சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராதாரவி படத்தில் வந்தாலே போதும் என்று கூறும் அளவிற்கு, இந்த படத்திலும் ரொம்பவும் அசால்ட்டாக வந்து மிரட்டிவிட்டு போயிருக்கிறார். யுவாவின் கேமரா, குதிரை பந்தயத்தில் புகுந்து விளையாடியிருக்கிறது. மற்ற காட்சிகளையும் ரொம்பவும் துல்லியமாக படமாக்கியிருக்கிறது. மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி அமைந்திருப்பது பலம். படத்தில் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் அனுபவத்தை அது கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு திருப்தியான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது.