குஜராத்தில் கணிசமாக வசிக்கும் பட்டேல் இனத்தவர் தங்களை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர்.இந்த போராட்டத்துக்கு தலைமையேற்று நடத்திய ‘பதித்தார் அனாமத் அந்தோலன் சமிதி’ அமைப்பின் (பாஸ்) தலைவரான 23 வயது ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர் களை விடுவிக்கக்கோரி நேற்று முன்தினம் குஜராத்தில் சர்தார் பட்டேல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் லால்ஜி பட்டேல் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.அப்போது, வடக்கு குஜராத்தின் மேசனா நகரில் போராட்டக் குழுவினர், மாவட்ட உணவு கிடங்கு, அரசாங்க கட்டிடம் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தில் ஈடுபட்டோரை விரட்டி அடித்தனர். மேசனா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டது.போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் நேற்று முழு அடைப்புக்கு சர்தார் பட்டேல் குழுவினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இதற்கு மேசனா நகர் தவிர மாநிலத்தில் வேறு எங்கும் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.இதற்கிடையே மேசனா நகரில் நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நேற்று திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுபற்றி, மேசனா மாவட்ட கலெக்டர் லோச்சன் சேக்ரா கூறும்போது, முழு அடைப்பு அழைப்பின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. நிலைமை சீராகும்வரை இணைய தளசேவை முடக்கப்பட்டு இருக்கும் என்றார்.போலீசார் கூறுகையில், சிறை நிரப்பும் போராட்டத்தின்போது நடந்த கலவரம் தொடர்பாக லால்ஜி பட்டேல் மற்றும் 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றனர்.இந்தநிலையில் பாஸ் அமைப்பைச் சேர்ந்த பவின் குந்த்(வயது27) என்ற இளைஞர் போலீஸ் நடவடிக்கைகளை கண்டித்து சூரத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.