பெண் டாக்டருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் டாக்டர்.வி.எம்.தாமஸ் என்பவர் சென்னை பெர்ட்டிலிட்டி சென்டர் என்ற பெயரில் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பெரம்பூர் பட்டேல் சாலையில் வசிக்கும் டாக்டர். ரம்யா ராமலிங்கம்(35) என்பவர் வேலை செய்தார்.

குழந்தையின்மை மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் ரம்யா சிறந்த சிகிச்சை காரணமாக நோயாளிகள் வருகை அதிகரித்தது. டாக்டர்.தாமசும், டாக்டர்.ரம்யாவும் பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தினர்.

இதனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு கூட்டம் அலைமோதியது. இதையடுத்து தாமஸ் பங்களாதேஷிலும் கிளினிக் துவங்கினார். இந்நிலையில் மூன்றாண்டுகள் பணியாற்றிய ரம்யா வேலையிலிருந்து விலகினார். தனியாக கோயம்பேடு அருகே கிளினிக் துவங்கினார்.

இதனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் அனைவரும் ரம்யாவை நாடி செல்லத்துவங்கினர். இதன் காரணமாக தாமஸ் நடத்திவந்த கிளினிக்கில் கூட்டம் குறைய துவங்கியது. வருமானம் குறையவே விழித்துக்கொண்ட தாமஸ் மீண்டும் தனது கிளினிக்கில் இணையும் படி ரம்யாவுக்கு அழைப்பு அனுப்பினார். ஆனால் ரம்யா ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற டாக்டர் தாமஸ் ரம்யா உயிருடன் இருக்கும் வரை தனது தொழிலை தூக்கி நிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தவர் ரம்யாவை தீர்த்துக்கட்ட வேண்டும் அதே நேரம் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்று முடிவு செய்து கூலிப்படையை தயார் செய்துள்ளார்.

சென்னை எண்ணூரை சேர்ந்த பழனி(எ) பழனிசாமி, முகிலன் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இதில் தாமஸ் கிளினிக்கில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யோவனா, சத்யகலா, பவானி ஆகியோர் உடந்தை. டாக்டர்.ரம்யா கிளினிக்கிலிருந்து வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு பெண் வேடமிட்டு பழனிசாமி அவர் வீட்டருகில் மறைந்திருக்க இரவு கிளினிக்கிலிருந்து ரம்யா வீடு திரும்பி தனது வீட்டுக்குள் வண்டியை நிறுத்தியுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த பழனி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரம்யாவின் உடலில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கைகள், முதுகு என பல இடங்களில் சரமாரியாக வெட்டுகள் விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தவர் சத்தம் போட கொலையாளி பழனி தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்யா மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரம்யா வெட்டுப்பட்டது பற்றி அவரது தாயார் தனது மகளை டாக்டர் தாமஸ் ஏற்கனவே கொலை செய்வேன் என்று மிரட்டியிருந்தார் என்று புகார் அளிக்க,  போலீஸார் டாக்டர் தாமசை பிடித்து விசாரித்துள்ளனர்.விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கூலிப்படை ஏவி ரம்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக தாமஸ் ஒப்புக்கொண்டார்.தாமஸ் அளித்த தகவலின் பேரில் பழனி (எ) பழனிசாமி , முகிலன், தாமஸ் கிளினிக்கில் பணியாற்றும் யோவனா, சத்யகலா, பவானி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.