ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இழந்த பெயரை மீட்டெடுக்க அவர் திடீரென இந்த வழக்கை தொடர்ந்துள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பகுதி மக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கரு.பழனியப்பன், சசிகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் நடிகர் விஷால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நடிகர் விஷாலே நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வாதாடவுள்ளார். விஷால் திடீரென தானாக முன்வந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தானாக வாதாடவும் உள்ளார். விஷாலின் இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன என ரசிகர்கள் மண்டைய குடைந்து வருகின்றனர்.  ஜல்லிக்கட்டின் போது இழந்த பெயரை மீட்டெடுக்கும் வகையில் விஷால் தற்போது இந்த வழக்கை தொடர்ந்துள்ளாரா? அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆதாயம் தேடும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.