தமிழக அரசு எப்படி கவிழும் என்பது தினகரனுக்கு தான் தெரியும் வைகோ பேட்டி

மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒகி புயல் தாக்கிய போது மரணத்துடன் போராடிய மீனவர்களை உயிர் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்படவில்லை. அந்த புயல் கடந்து சென்ற 2 மணி நேரத்தில் நம்முடைய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் கடலுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. காப்பாற்றப்பட வேண்டிய பலர் உயிர் இழக்க நேர்ந்தது. பிரதமர் குஜ்ராத் தேர்தலில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார். ஆர்.கே.நகரில் முதலமைச்சர் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார். அரசுகள் தங்களுடைய கடமைகளை செய்ய தவறிவிட்டன. இப்பொழுது வந்து பார்வையிடுகின்றனர். வர்தா புயலின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கே அறிவித்த நிதியை கூட தரவில்லை. இப்பொழுதும் மத்திய அரசு தனது கடமையை செய்யவில்லை. பெரும்பாலான மீனவர்கள் உயிர் இழந்து உள்ளனர். சரியான எண்ணிக்கையை கூட கொடுக்கவில்லை.

7 வருடம் வராமல் இருந்தால் தான் நிவாரணம் என்ற சட்டம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதை 60 நாட்களில் யார் எல்லாம் திரும்பவில்லையோ அந்த குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் கொடுக்க முன் வர வேண்டும். மத்திய அரசு இந்தமுறையாவது தனது கடமையை செய்ய முன்வர வேண்டும். ஆனால் உரிய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏராளமான சேதம் ஏற்பட்டு உள்ளது. உரிய நிவாரணம் கிடைக்க மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவாரத்தில் ஆட்சி எப்படி கவிழும் என்பது தினகரனுக்கு தான் தெரியும். நான் அப்படி எல்லாம் யூகிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.