மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்ட செய்திகள்

கோவை மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து ஆண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த ஆண் யானை இன்று அதிகாலை உயிரிழந்தது. 
 
மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. மதுரையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,073 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னை வளசரவாக்கத்தில் மின்கம்பம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து மற்ற வாகனங்களுக்கு பரவாமல் தடுத்துள்ளனர்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் 2 காவலர்கள் உள்பட மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,672-ஆக உயர்ந்துள்ளது. மேலும் விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. 
 
சென்னை கொடுங்கையூரில் 9 கிலோ கஞ்சாவுடன் நின்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை அடையாறில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த விஜய் மற்றும் வசந்தகுமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
தென்காசி கடையநல்லூரில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலக்கடையநல்லூர் விவசாயி செல்லதுரை இட தகராறு காரணமா நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.  
 
காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. காரைக்காலில் இதுவரை 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 132 பேர் குணமடைந்துள்ளனர்.
 
திருவண்ணாமலை ஆரணியில் காதலனின் தந்தை மிரட்டியதால் மனமுடைந்த நர்சிங் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆரணி அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்தை(24) காதலித்துள்ளார். தந்தை நாகராஜீக்கு பிரசாந்தின் காதல் விவகாரம் தெரிந்ததால் மாணவி வெண்ணிலாவை கண்டித்துள்ளார். பிரசாந்தின் தந்தை கண்டித்ததால் மனமிடைந்த வெண்ணிலா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.  
 
சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய பிரியதர்ஷினி (29) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிறுவனம் அளித்த இலக்கை அடைய முடியாததால் பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா (13) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலத்தை கைப்பற்றி மயிலாப்பூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.