கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்கார்த்திகை விழா

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யவாஜனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம் நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர், சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து, மாலை 6 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர், சுப்பிரமணியர் சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் 7.30 மணிக்கு கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரரான கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஹரி பட்டர், மணி பட்டர், அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னதியிலும் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. இரவு சுமார் 7.30 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பானை ஏற்றப்பட்டது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில்:

இத்திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மேலவாசலில் சொக்கப்பானை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.