“நல்ல படங்களை ஒளிபரப்ப ஆயிரம் சேனல்கள் இருக்கின்றன”; ‘டு லெட்’ இயக்குநர் செழியன்

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட்  ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். 
ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட்  ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. 
இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் செழியன்
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது.. நடுத்தர மக்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘ டு லெட்  ’ படத்தின் மையக்கரு. 
பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது.. அவ்வளவுதான்.. அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம்.
பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது. மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.. இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை.. ஒருவேளை ‘ டு லெட்  ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும்போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.
விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்பு தானே என ஒதுக்கிவிட தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி.. 
ஆம்.. இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 
அதேசமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும் அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே..
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும்.. அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார்.. அது எப்படி என்றால் இப்படித்தான்.. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது விருது பெறுவது இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தை தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன 
சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப்படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகை கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன.. இந்த வணிகம் இங்கே பலருக்கு தெரியவே இல்லை.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார்.  ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை.. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தை தயாரித்தார். 
உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும்போதுதான் அதை இன்னும் மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன்.. அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் செழியன்.
இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்