”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் நடந்த மாபெரும் விழா

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90&வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது.
விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்   மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அந்த காலத்தில் சிறந்த நடிகர்கள் இருந்தனர். அவர்கள் கதாப்பாத்திரமாக நடித்தனர். ஆனால் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடித்தவர் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜரின் உண்மைத் தொண்டர். காமராஜரின் பொற்கால ஆட்சியை அவர் சினிமாவில் காட்ட தயங்கியதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டோரின் வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்தார்.
ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டினார். நாட்டுப்பற்றை கொடுத்தார். இவ்வாறு எச். வசந்தகுமார் கூறினார்.
நாயகன் அறிமுகம் இந்த விழாவில் மராட்டிய மாநிலத்தில், 30&க்கும் மேற்பட்ட நடன பள்ளிகள் அமைத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் நடன பயிற்சி அளித்து வரும் மேக் மோகன் பால், அவரின் மனைவி மேரி மேக்மோகன் பால் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேக் மோகனின் மகன், லாபி நடன கலைஞர் ஆவார். இவர் ஏற்கனவே இந்தியில் ஆல்பம் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி 2 இந்தி படங்களிலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் புது படத்தில் அறிமுகமாகவும் உள்ளார். 
இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. விழா குறித்து லாபி கூறும்போது, ”என் பெயர் லாபி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தாங்க. ஆனா நான் தமிழ் பையன். கோயம்புத்தூர் தாங்க என் சொந்த மாவட்டம். அப்பா, அம்மா எல்லோரும் ரொம்ப நாளுக்கு முன்னாலே மும்பை வந்துட்டாங்க. நடன போட்டியில் சர்வதேச அளவில் பங்கு பெற்று உள்ளேன். நடன போட்டிக்கு 7 நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன். தற்போது இந்தியில் முன்னணி கதாப்பாத்திரத்தில் 2 படங்கள் பண்றேன். தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. தமிழ்நாட்டிற்கு வந்து சிவாஜி சார் விழாவுல கலந்துகிட்டது ரொம்ப பெருமையா இருக்கு. அவர் மிகப்பெரிய மனிதர். அவர் போல நானும் வரணும். தமிழ் மக்களாகிய உங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் எனக்கு தேவை.” என்றார்.
சிவாஜியும், தமிழும் விழாவிற்கான ஏற்பாடுகளை அகமதாபாத் தமிழ் சங்கம், சென்னை தமிழ் சங்க ​தலைவர் ​டாக்டர். டி. இளங்கோவன், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், நக்கீரன் தமிழ் சங்கம், டெல்லி தமிழ் சங்க பொதுச்செயலாளர்  முனைவர். இரா. முகுந்தன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பாரிவேந்தர் தமிழ் மன்றம், செஞ்சி தமிழ் சங்கம், சிவாஜி நலப் பேரவை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க துணை தலைவர் ஆர். திருநாவுக்கரசு நன்றியுரை கூறினார். மீடியா பாஸ்கரன் மற்றும் செழியன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். செய்தி தொடர்பு பணிகளை செல்வரகு கவனித்தார்.