‘சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க இரஞ்சித்’ . பாலிவுட் இயக்குனர் , நடிகர் அனுராக் காஷ்யப் நெகிழ்ச்சி…!

பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் பேசு பொருளாகி இருக்கிறது.

சமீபத்தில் ‘காலா’ ‘பரியேறும் பெருமாள்’ படங்களை பார்த்த இயக்குனர் அனுராக் . இயக்குனர் இரஞ்சித்தை
சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்திருக்கிறார்.

இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ்
இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்தும் சிலாகித்து பேசியவர்….

இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.

“இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அநுராக் காஷ்யப்.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித், “உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ” காலா”, “பரியேறும் பெருமாள்” குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார்” என்று உற்சாகமாக கூறினார்.