முதல்வர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் நுண் துளையிடும் சிகிச்சை மூலம் 35 வயது கூலி தொழிலாளி பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை

முதல்வர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் நுண் துளையிடும் சிகிச்சை மூலம் 35 வயது கூலி தொழிலாளி பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை
போர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக செய்தது

சென்னை, பிப்ரவரி 20, 2020: -முதல்வர் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் நுண் துளையிடும் சிகிச்சை மூலம் 35 வயது கூலி தொழிலாளி பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சையை போர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக செய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான மகாலட்சுமி. கூலித் தொழிலாளியான இவருக்கு இருதய வால்வு குறுகியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுண் துளையிடும் மிட்ரல் வால்வ் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு இருதயத்தில் இருந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையை போர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகர்கள் டாக்டர் மது சங்கர், டாக்டர் ஆன்டோ சகாயராஜ், இருதய மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கீர்த்திவாசன் ஆகியோரைக் கொண்ட திறமைமிக்க டாக்டர்கள் குழு செய்தது. இந்த உயிர் காக்கும் அறுவை சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது.

கால் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வேகமான இருதய துடிப்பு ஆகிய பிரச்சினைகள் காரணமாக மகாலட்சுமி போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இருதயத்தில் உள்ள பெருநாடி வால்வு சுருங்கியதால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிக நுரையீரல் அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தை அனுமதிக்கும் வால்வில் அதிக அளவிலான கால்சியம் இருந்ததன் காரணமாக நுண் துளையிடும் மிட்ரல் வால்வ் மாற்று சிகிச்சையை மேற்கொள்ள டாக்டர்கள் குழு முடிவு செய்தது. மார்பின் வலது பக்கத்தில் ஒரு சிறிய நுண் துளையிடல் மூலம் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதைத் தொடர்ந்து நோயாளி வேகமாக குணமடைந்தார்.

இந்த சிகிச்சை நடைமுறை குறித்து டாக்டர் மது சங்கர் கூறுகையில், நுண் துளையிடும் செயல்முறை மூலம் மிட்ரல் வால்வ் மாற்று சிகிச்சைக்கு தொழில்நுட்பம் தெரிந்த நிபுணர்கள் தேவை. இந்த நுண் துளையிடும் சிகிச்சை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில், இதன் காரணமாக குறைந்த அளவு ரத்த இழப்பு ஏற்படுகிறது. உடலில் தழும்பு ஏதும் ஏற்படாது, அதிக அளவிலான வலி இருக்காது. மேலும் நோயாளி விரைவில் குணமடைவார். மேம்பட்ட மயக்க மருந்து நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள் இத்தகைய எளிய இருதய சிகிச்சை நடைமுறைகளுக்கு வழி வகுத்துள்ளன. இதன் காரணமாக நோயாளி வேகமாக குணமடையலாம் என்று தெரிவித்தார்.

இந்த சிகிச்சையை செய்து கொண்ட நோயாளி மகாலட்சுமி கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நான் பயன் பெற்றுள்ளேன். போர்டிஸ் மலர் மருத்துவமனையின் சிறந்த இருதய நிபுணர்கள் எனக்கு நன்கு சிகிச்சை மேற்கொண்டனர். இதன் காரணமாக சிகிச்சை முடிந்த மறுநாளே என்னால் நடக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து என்னுடைய வழக்கமான பணிக்கும் செல்ல முடிந்தது என்று தெரிவித்தார்.