சசிகுமார் நாயகி சிபிராஜுக்கு ஜோடியானார்

சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகி ‘கிடாரி’ படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், மனதை கவரும் பாவனைகளாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்துச் சென்றவர் நிக்கிலா விமல்.  இவர் அடுத்ததாக சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வினோத் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் வி.இசட்.துரையிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

பல விளம்பரங்களையும் இயக்கியுள்ளார். அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இப்படத்தை ‘பாஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார். இதுவரை கிராமத்து பெண்ணாக நடித்து வந்த நிக்கிலா விமல் இப்படத்தில் நகரத்தில் வாழக்கூடிய பெண்ணாக வருகிறாராம். அதுவும் அனிமேஷன் கலைஞராக வருகிறாராம்.  சமுதாய பிரச்சினையை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீர், பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.