காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும்  –  தொல் திருமாவளவன்

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் அரசியல் தலைவர்கள் திரு தொல் திருமாவளவன் MP, திரு தனியரசு MLA, திரு வேல்முருகன் EX MLA,  திரு திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டினர்.

தொல் திருமாவளவன் அவர்கள் பேசும்போது “மத்தியில் ஆளக்கூடியவர்கள் பீட்டா என்ற விலங்கு நல அமைப்போடு இணைந்து நம்முடைய பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டை தடுக்க எவ்வாறு சதித்திட்டம் தீட்டினார்கள்.. தமிழக அரசியல் களம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தில் பாத்திரம் வகித்தது..தமிழக அதிகார வர்க்கம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தை சிதறடிக்க முயற்சி செய்தது..என்பதை ஆதாரங்களோடு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் வாக்குமூலங்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் ” என்று பாராட்டினார்.
திரு தனியரசு MLA பேசும்போது ” மெரினா புரட்சி தமிழ் மக்களின் போராட்ட வடிவத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்.. நம்மை வலிமைப்படுத்துகிற ஒரு படம்..வருங் காலத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிற காலகட்டத்தில் ஒரு போராட்டத்தை எப்படி அறவழியில் போராட வேண்டும் என்ற உந்துதலையும் நம்பிக்கையையும் தருகிற படம் ” என்று பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வேல்முருகன் பேசும்போது “வரலாறு சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான ஆரம்ப விதை மெரினாவில் அன்று விதைக்கப்பட்டது..எப்படி அது லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது என்பதை நாளைய நம்முடைய தமிழ் சமூகம் தெரிந்து கொள்கிற வகையில் மிகச்சிறப்பாக எடுத்து தந்திருக்கிறார்கள்.”என்று பேசினார்.
திரு திருமுருகன் காந்தி பேசும்போது ” ஜல்லிக்கட்டு போராட்டம் இந்திய அரசு தமிழர்களின் பண்பாட்டை நசுக்குவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த போராட்டம்.. அரசியல் தலைவர்கள் ஏமாற்றுவதற்கு எதிரான போராட்டம்.. இந்த போராட்டத்தில் பொதுவெளியில் மறைக்கப்பட்ட தகவல்களை சிறப்பாக புலனாய்வு செய்து திரைப்படமாக தந்துள்ளனர்..இந்த திரைப்படத்தை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.. எல்லா இடங்களுக்கும் தமிழர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்று கேட்டு கொண்டார்.