சுதந்திரம் என்ற பெயரில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது கண்டிக்கத்தக்கது – டாக்டர்.குருசங்கர்

சுதந்திரம் என்ற பெயரில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது கண்டிக்கத்தக்கது என இந்திய உடல்நல சேவை வழங்குநர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்.குருசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் எஸ். குருசங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள விவரம்:

கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு அவர்கள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே வைரஸ் தொற்று உள்ளவர்கள் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் வைரஸ் தொற்று உள்ள ஒருவர் டெல்லியிலிருந்து கவுகாத்திக்கு பாசிட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்துள்ளார். இதன்மூலம் அவர் சந்தித்த நபர்கள் அனைவருக்கும் கொரானா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அலட்சியப்போக்கு கூடாது.

அதேபோல் சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் மருத்துவர்கள் பற்றியும் மருத்துவமனைகள் பற்றியும் தவறான செய்திகள் ,வதந்திகள் பரப்பப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த தருணத்தில் மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தவறாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது. அது தேவையில்லாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவமனைகள் சட்ட ஆலோசனைகளை பெற துவங்கினாள் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என டாக்டர் குருசங்கர் வலியுறுத்தியுள்ளார்.