மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வரும் சூர்யாவின் 10கேள்விகள்

புதிய கல்வி கொள்கைக்கு 2019 ஆம் ஆண்டு 10 கேள்விகளை முன்வைத்தார் நடிகர் சூர்யா, அவை தற்போது இணையத்தில் அதிகம் பகிரபட்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.
 
நேற்று முன் தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தவும், மனிதவள மேம்பாட்டுத்துறையை கல்வி அமைச்சமாக பெயர் மாற்றம் செய்யப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கல்வியாளர்கள், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
மத்திய அரசின் புதிய தேசியக் கல்வி கொள்கையை ஆரம்பம் முதலே கவனத்தில் கொண்டு வரும் சூர்யா, அதுதொடர்பாக படித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கையை 2019 ஆண்டே தெரிவித்தார். அப்போது புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அவரின் கோரிக்கையை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசும்போது, அதிலிருக்கும் குளறுபடிகள் என்று சிலவற்றை  வெளிப்படையாக பட்டியலிட்டார். அப்போது 10 கேள்விகளை முன்வைத்தார் 
 
1. முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
 
2. மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
 
3. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப் போகிறதே இதற்கு பதில் என்ன?
 
4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8-ம் வகுப்புவரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வியாகும்?
 
5. நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
 
6. ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?
 
7. 50 ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும் கோச்சிங் சென்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?
 
8. சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஓரேயொரு ஆசிரியர் அமைப்பு, ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?
 
9. விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படி சரியாகும்?
 
10. எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?
 
இந்த கேள்விகள் அன்றைய நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தற்போது மீண்டும் அந்த கேள்விகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.