லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனலின் ஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு˜ சென்னையில் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது

சென்னையில் லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனலின் ஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மிக வேகமாக வளர்ந்து
வரும் சேவை அமைப்பாகும். இந்த சங்கத்தில் 48,470 லயன்ஸ் கிளப்புகள் மற்றும் இதில் 210 நாடுகளைச் சேர்ந்த 14 லட்சத்து 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தியாவில் லயன்ஸ் கிளப்புகள் 100க்கும் மேற்பட்ட கண் மருத்துவமனைகள், புற்றுநோய் கண்டறிதல் மையங்கள், எலும்பியல் முகாம்கள், நீரிழிவு கண்டறிதல் முகாம்கள், சிறுநீரக டயாலிசிஸ் யூனிட்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இளைஞர்களுக்கான
நடவடிக்கைகள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன. 30 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் 5 ஆயிரம் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி
பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவர்களுக்கான தொழில் பயிற்சி திட்டங்கள் லயன்ஸ் கிளப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல், ஊனமுற்றோருக்கு தேவையான உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார திட்டங்களையும் வழங்கி வருகிறது.

ஐஎஸ்ஏஏஎம்இ மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம், இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் நட்பை மேம்படுத்துவதற்கும், தோழமை உணர்வுடன் பழகுவதற்கும் மற்றும் அவர்களின் சேவை நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆகும். பல்வேறு சேவை நடவடிக்கைகளுக்காக 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதற்காக லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் பவுண்டேஷனால் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள பிரச்சாரம் 100 திட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.
இந்த மாநாட்டின் போது 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சேவை நடவடிக்கைகள் மூலம் கண் பார்வை பராமரிப்பு, குழந்தை புற்று நோய், பசி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் 2 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள்.

சென்னையில் டிசம்பர் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 47வது மாநாடு குறித்து கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், சர்வதேச இயக்குனர் லயன் ஆர். சம்பத், முன்னாள் சர்வதேச தலைவர்கள் லயன் கே.தனபாலன், லயன் என்.எஸ். சங்கர், லயன் கே.ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பு குழு தலைவர் லயன் ஜி. ராமசாமி, முன்னாள் கவுன்சில்
தலைவர் லயன் கே. பிரித்வி குமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.