தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்கு நல வாரியம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது, உச்சமன்றத்தை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், போராட்டத்தின் போது தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கவில்லை எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.  இருப்பினும், சட்டம் மற்றும் அவசர சட்டம் கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.  இதனிடையே, ”உச்சநீதிமன்றத்தை எதிர்க்கும் வகையில் போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்படவில்லை. அமைதியான வழியிலே போராட்டங்கள் நடைபெற்றது” என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து, ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.