4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டி

சென்னை, 13 ஜூலை 2019: நந்தம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தருவதற்காக பயிற்றுவிக்கும் முறைகளில் குறிப்பிடத்தக்கது அபாகஸ். இந்த முறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாக தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனத் தலைவர் பஷீர் அகமது தொடங்கி வைத்தார். இந்த விழாவில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. ராமராமநாதன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு 8 நிமிட மற்றும் 5 நிமிட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.