இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல், தொடரை வெல்வது யார்?

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாளை (பிப்ரவரி 1-ந்தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தி காணப்படுவதால் தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையில் திகழ்கிறது. தொடக்க வீரர் ராகுல் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கோலி, ரெய்னா நிலையாக ஆடக்கூடியவர்கள். யுவராஜ்சிங் திறமையை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும். மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. பந்துவீச்சில் பும்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா நல்ல நிலையில் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் மோர்கன், ஜோரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜோர்டான், மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 போட்டியிலும் குறைந்த அளவில் தான் ரன் எடுக்கப்பட்டன. பெங்களூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ரன் குவிப்பு அதிகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது போட்டியாகும். இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் இந்தியா 4-இல், இங்கிலாந்து 6-இல் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ்சிங், டோனி, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, பர்வேஷ் ரசூல், புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட், மன்தீப் சிங். இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, ஜோர்டான், ஆதில் ரஷீத், மில்ஸ், டேவிட் வில்லி, பேர்ஸ்டோவ், ஜேக்பால், புளுன்கெட், டாசன்.