பட்டாசு விற்பனைக்கு தடை

ஆண்டு தோறும் தீபாவளி நேரத்தில் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் புதிது புதிதாக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இது போன்ற பட்டாசுகளை வெடிக்கும் போது அதிக அளவில் காற்று மாசுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் ஆண்டு தோறும் தீபாவளிக்குப் பின்னர் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் டெல்லி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இந்தத் தடையை கடந்த மாதம் தற்காலிகமாக நீதிமன்றம் நீக்கி இருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.  இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது நவம்பர் 1-ஆம் தேதி வரை டெல்லி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவை மீண்டும் நீதிமன்றம் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் தீபாவளிக்கு பின்னர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவைப் பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.