தமிழ்நாட்டுக்குள் சுப்பிரமணியசுவாமியை நுழைய விடக்கூடாது, ஈஸ்வரன் கோபம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்களும் விரும்புகிறார்கள். தமிழக அரசும் விரும்புகிறது. ஆனால் பீட்டா அமைப்பு உள்நோக்கத்தோடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை செய்துள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம். தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உச்சநீதிமன்றம் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக சட்டத்தை கொண்டு அதை நிறைவேற்றி இருக்கலாம். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது.  ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. இந்த ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் முழுபொறுப்பு. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் வரும் பாராளுமன்ற கூட்ட தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசு ஆட்சி ஏற்படும் என்று சுப்பிரமணிசாமி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அப்படி என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. கர்நாடக அரசை கலைக்க சொல்ல வேண்டியது தானே. அவருக்கு(சுப்பிரமணிய சாமி) வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசலாமா? சுப்பிரமணியசாமியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட கூடாது. வறட்சி காரணமாக விவசாயிகள் இறப்பது வேதனை அளிக்கிறது.பயிர் வாடி இறப்பதை விட வாங்கிய கடனை எப்படி அடைப்பது?  என்ற காரணத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்க விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் உயிர் இழந்த ஒவ்வொரு விவசாயி குடும்பத்துக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.