30 வருடங்கள் கழித்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல்

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 30 வருடங்கள் கழித்து தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் இதுவரையிலும் பொறுப்பில் இருந்த நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும், இவருக்கு எதிரணியாக  ‘ராம ராஜ்யம்  அணி’ என்ற பெயரில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

இந்த ‘ராம ராஜ்யம் அணி’யின் சார்பில் போட்டியிடுபவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ‘ராம ராஜ்யம் அணி’யின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டிடும் நடிகை ரோகிணியும் பேசினார்.

நடிகை ரோகிணி பேசும்போது, “இந்த டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான். ‘இதயத்தை திருடாதே’ படத்தில் ஹீரோயின் கிரிஜாவுக்கு நான்தான் பின்னணி குரல் கொடுத்தேன். அதுதான் எனது முதல் டப்பிங் பணி.

இதுவரை இந்த சங்கத்தில் எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது. நானும் எண்ணியது இல்லை. ஆனால், இன்று  கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எனக்குள் தோன்றியிருக்கிறது. வெளியில் விவசாய பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும் நான், என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை  இதுவரையிலும் கவனிக்கவில்லையே என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

முதலில் இந்தச் சங்கத்தில் இருந்த மூத்தவர்கள் மீது, பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ற ஒரு நம்பிக்கை எனக்குள் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் நான் மற்ற வேலைகளை  கவனித்து வந்தேன். கடந்த 34 வருடங்களாக சங்கத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியப் பணம், கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும், சங்க உறுப்பினர்களில் பெரும்பாலோர் வேலை இல்லாமல் இருக்கும் கொடுமையை ஒரு கலைஞராக என்னால் உணர முடிந்தது.

நமது சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதும், ஊழல் நடந்ததும், அதை மூடி மறைக்கும் வேலைகள் நடப்பதும்.. இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதைப் பார்த்ததும் முதலில் இந்த பிரச்சினையைத்தான் நாம் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.

இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் நான் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு  அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதன் பின்புதான், ‘சரி.. நானும் உங்களுடன் பொறுப்புக்கு வருகிறேன். அனைவரும் ஓன்றாக பணியாற்றலாம்’ என்று சொல்லித்தான் இவர்களுடன் இணைந்தேன். 

வீடு வீடாக சென்று அவர்களை சந்தித்தபோது,  அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் ‘நாங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது’ என்பதுதான்.  இனிமேல் டப்பிங் கலைஞர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யபட வேண்டும்.

பாலன் என்ற ஒரு உறுப்பினர் இறந்த பின்பு அவருடைய குடும்பத்தினர் அவருடைய உறப்பினர் அட்டையை கொண்டு வந்து அவருடைய இறுதி சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும் ஏனோதானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறினார்கள். இந்த முறைகேடுகள் எல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனபதால்தான் இந்த நிகழ்வு.

இப்படி பல பிரச்சினைகளைக் கேட்டபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் இவர்களுடன் கை கோர்த்து நிற்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முடிவின்படிதான் இந்த தேர்தலில்  நான் இவர்களுடன் கை கோர்த்து இந்த ‘ராம ராஜ்யம் அணி’யில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.

இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது. அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும்.  இனி ஒரு மாற்றம் வேண்டும்.  அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்றார் நடிகை ரோகிணி.

ராம ராஜ்ய அணி சார்பில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாசரதி பேசும்போது, “திரையில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கு உயிர் கொடுக்கும் அதாவது குரல் கொடுக்கும் கலையில் ஈடுபட்டுள்ள உறுபினர்களை கொண்டுள்ள சங்கம் எங்கள் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம்.

1983-ல் பதிவு செய்யப்பட்டது தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அதில் இருந்து பல கட்ட வளர்ச்சிகளையும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளையும் எங்கள் சங்கம் பார்த்துள்ளது.

அனைத்து நடிகர்களுக்கும் குரல் கொடுக்கும் எங்களுக்கு நங்கள் சொந்த வாழ்வுரிமையை மீட்கவும், அதை பாதுகாக்கவும் குரல் எழுப்ப முடியாமல் தவித்த நிலையில் இன்று வணக்கத்திற்குரிய திரு. G.V. ரத்னகுமார் அவர்களின் பெரும் முயற்சியில் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு நியாயமான தேர்தலை நோக்கி எங்கள் சங்கம் முன்னேறி செல்கிறது.

திரைத் துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தவிர FEFSI கூட்டமைப்பில் உள்ள 23 சங்கங்களில் எங்கள் சங்கமும் ஒன்று. இதில் மற்ற 22 சங்கங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் எங்கள் சங்கத்தின் வளர்ச்சியை ஓப்பிட்டு பார்க்கும்போது மிகவும் பின் தங்கியே உள்ளோம். இதுவே உண்மை.

காரணம். என்னவென்றால் மிகவும் பிரபலமான நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே இந்த சங்கம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற மாயையை 3 தலைமுறைகளாக நம்ப வைத்ததுள்ளனர். அதை இந்த தலைமுறையிலாவது அதை உடைக்கவேண்டும் எனறுதான் இந்த போராட்டம்.

மற்ற எல்லா சங்கத்திலும் பெருவாரியாக உறுப்பினர்களுக்கு காப்பீடும், ஓய்வூதிய திட்டங்களும், ஓய்வு பெறும் பயன்களும் உள்ளன.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சங்கத்தில் உறப்பினராக உள்ள ஒருவர் அவருடைய உறுப்பினர் அட்டையை கொண்டு வந்து சங்கத்திடம் ஒப்படைத்து ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு தகுந்த மரியாதையை செலுத்தி விழா அமைத்து சங்கத்தில் உள்ள அணைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கைதட்டி உற்சாகபடுத்தி அவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தி அவருக்கு ஓய்வு தொகையாக ஒரு குறுப்பிட்ட தொகையை வழங்கி அவருடைய வாழ்வுரிமையை பாதிக்காத அளவில் பணிகளை செய்கின்றன.

ஆனால், டப்பிங் கலைஞர்கள் சங்த்கதை பொறுத்தவரை இந்த மாதிரியான செயல்கள் நடைமுறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாமல் போனதிற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு காரணமாக இருந்தது சில பல முறைகேடுகள். அந்த முறைகேடுகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போட முடியும்.

இருந்தாலும் அதில் உள்ள ஒரு சில முறைகேடு களைத்தான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம். உங்கள் மூலமாக எங்கள் அனைத்து உறுபினர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் எனபது முக்கியம். இந்த மாதிரியான முறைகேடுகள் இனிமேல் நடக்காமல் தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் தனி அணியாக சங்கத் தேர்தலில் நிற்கிறோம்.

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கல்வி உதவித் தொகையில் முறைகேடு, சம்பளம் பிடித்தலில் முறைகேடு, மருத்துவ உதவி தொகையில் முறைகேடு, இது மட்டுமல்லாமல் நல்உள்ளம் படைத்த சில கல்லூரிகள் வருடா வருடம் வழங்கும் குறுப்பிட்ட இலவச கல்லுரி சீட்டுகள்வரைக்கும் இவர்களின் முறைகேடுகள் நிகழ்கின்றன.

சில முறைகேட்டை உறுப்பினர்கள் தட்டிக் கேட்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினார்கள். சிலர் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

சங்க விரோதிகள் என்கிற முத்திரையுடன் இந்த மாதிரியான செயல்களில் தொடந்து இடுபட்டு வருவதால் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்யம் அணியாக சந்திக்கவுள்ளோம்..” என்றார்.