உலக அளவில் வரலாற்று சாதனை படைத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் `கோடீஸ்வரி முதல் முறையாக ரூ.1 கோடி ஜாக்பாட் வென்ற மதுரை மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா

சென்னை, ஜன. 20,2020: பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களின் தனித்துவமிக்க
திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியாக தமிழ் தொலைக்காட்சியின் `கோடீஸ்வரி
நிகழ்ச்சி விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து
வழங்குகிறார்.

கோடீஸ்வரி நிகழ்ச்சி பெண்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த 31 வயதான மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா முதல் முறையாக 1 கோடி ரூபாய் ஜாக்பாட் தொகையை வென்று உலக அளவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி வரும் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சி பெண்களின் சிறிய கனவுகளுக்கான சிறகுகளை கொடுத்து அவர்களின் உறுதிமொழியை நிறைவேற்றுகிறது.

மதுரையைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகா வாய் பேச முடியாதவர் ஆவார். மேலும் அவருக்கு கேட்கும் திறனும் இல்லை. அதிர்வுகள் மற்றும் மற்றவர்களின் வாய் அசைவு மூலம் மட்டுமே அவரால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். அவரின் உறுதியும் தன்னம்பிக்கையும் அவருடைய கனவுகளை தொடரவும், வாழ்க்கையில் பல்வேறு தடைகளை தாண்டவும் உதவியது.

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் 1 கோடி வென்று வரலாற்று சாதனை படைத்த கௌசல்யா கார்த்திகா இந்த நிகழ்ச்சி பற்றி கூறுகையில், என்னுடைய ஒவ்வொரு நாள் வேலை மற்றும் தேவைகளுக்கும் எனது குடும்பத்தையே நான் நம்பியிருந்தேன். ஆனால், என் குழந்தை பருவத்திலிருந்தே நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்து எனது கனவை நனவாக்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நான் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். ராதிகா மேடத்துடன் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பிரபலமான இந்த கேம் ஷோ நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன். அதே சமயம் நான் இப்போது `கோடீஸ்வரி என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரு வயது குழந்தையின் தாயான கௌசல்யா, தனக்கு உள்ள குறையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அதன்படி, அவர் இளங்கலை பட்டப்படிப்பான பி.எஸ்சி தொழில்நுட்பம், அதேபோல் முதுகலையில் எம்.எஸ்சி
தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்பிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

1 கோடி ரூபாய் பணத்தை என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து அவர் கூறுகையில், முதலில் நான் இந்த பணத்தில் சிறு தொகையை நான் படித்த நாகர்கோவிலில் உள்ள வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளிக்கு வழங்க உள்ளேன். அதனைத் தொடர்ந்து இந்த பணத்தை கொண்டு இத்தாலி அல்லது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறேன். ஏனெனில் அது எனது கனவாகும் என்று தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வயாகாம்18 நிறுவனத்தின் பிராந்திய பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் ரவிஷ் குமார் கூறுகையில், இது போன்ற வரலாற்று தருணத்தை தனக்காவும், கோடீஸ்வரி மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகவும்
ஏற்படுத்திய கௌசல்யாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோடீஸ்வரி நிகழ்ச்சி பெண்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாகும். இது அவர்களின் கனவுகளை நனவாக்கும் நிகழ்ச்சியாகும். அவர்களுக்கான சிறிய கனவுகளாக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் இங்கு ஊக்கப்படுத்துப்படுவார்கள்.

எனவே கௌசல்யாவின் வெற்றி இது போன்ற கனவுகளுடன் உள்ள பெண்களுக்கான உத்வேகத்தை அளித்து அவர்களின் கனவுகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் என்று தெரிவித்தார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறுகையில், கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யா 1 கோடி ரூபாயை வென்றிருப்பது, இதே போன்ற பெண்களுக்கான முன்னுதாரணமாகும். இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும். கௌசல்யாவின் வெற்றி வரும் தலைமுறை பெண்களுக்கான அதிகாரம், ஈடுபாடு, செல்வாக்கு போன்றவற்றை ஊக்குவிக்கும்.

இதில் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், முதல் பெண் மாற்றுத்திறனாளியான கௌசல்யா, 1 கோடி ரூபாய் ஜாக்பாட் தொகையை வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

முதல் கோடீஸ்வரியான கௌசல்யா குறித்து ராதிகா சரத்குமார் கூறுகையில், தனது அறிவாற்றல் மற்றும் உறுதியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்த கௌசல்யாவை நான் பாராட்டுகிறேன். நான் அவரை சந்தித்து, அவருடைய வெற்றியை அனுபவித்த அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும். அவருடைய வெற்றி உண்மையிலேயே பலருக்கு உத்வேகத்தை அளிப்பதோடு ஊக்கத்தை அளிக்கும். அவருடைய வாழ்க்கையை சிறப்புடன் அவர் வாழ நான் வாழ்த்துகிறேன். இந்த சாதனை அவருடைய வாழ்க்கையில் ஓர் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர பங்குதாரர்களாக கோல்கேட், நிப்பான் பெயின்ட், அருண் எக்சல்லோ
மற்றும் ரின் ஆகியவையும் வங்கி பங்குதாரராக கோடக் மகிந்திரா வங்கியும் சிறப்பு பங்குதாரர்களாக தமிழ் மேட்ரிமோனி செயலி மற்றும் ஹெலோ செயலியும் உள்ளன. கோடீஸ்வரி நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை வயாகாம்18-ன் வீடியோ இணையதளமான வூட்டிலும் பார்க்கலாம்.

1 கோடியை வென்ற கௌசல்யா பங்கேற்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி வரும் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந் நிகழ்ச்சியை வூட் இணையதளத்திலும் பார்க்கலாம்.