பைரவா – சினிமா விமர்சனம்

ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார். அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவளையே சுற்றி சுற்றி வருகிறார்.  திருமணம் முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பஸ் நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு டெலிபோன் அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறது. இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடமே கேட்கிறார். அப்போது, கீர்த்தி சுரேஷ் தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறாள். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறுகிறாள். இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை. விஜய்யின் படத்தில் அறிமுகமாகும் காட்சியே மிகப்பெரிய மாஸாக உள்ளது. முதல் ஆக்ஷன் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஜெகபதி பாபுவுக்கு விஜய் தான் யார் என்பதை அறிமுகம் செய்யும் காட்சியிலிருந்து, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறுகளையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, பவர்புல் வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். ‘பாப்பா பாப்பா’ பாடலில் விஜய்யுக்கு இணையாக ஆட்டம் போட்டு கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவணைகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைக்கிறது. வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். இயக்குனர் பரதன், நாட்டுக்கு முக்கியமானது மருத்துவம். அந்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் தகுதியான நபர்களிடம் இருக்கிறதா? என்பதை சுட்டிக்காட்டும்படியான படமாக இதை கொடுத்திருக்கிறார். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு தன்னால் என்ன கொடுக்கமுடியுமோ? அந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் ஆங்காங்கே இருப்பது படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஆனால், சில பாடல்கள் சரியான இடங்களில் அமையாதது சிறிது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிக்கட்டும் வகையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.  அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் கலர்புல்லாக இருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் தனித்துவம் காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு பொஙfகல் விருந்து.