கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 58 வயது நபருக்கு சுவாச பிரச்சினை எக்மோ சிகிச்சை அளித்து குணப்படுத்திய கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 58 வயது நபருக்கு சுவாச பிரச்சினை எக்மோ சிகிச்சை அளித்து குணப்படுத்திய கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை

கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு போராடிய நோயாளியை காப்பாற்றி மருத்துவ நிபுணர்கள் குழு சாதனை

சென்னை, செப். 17- கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய 58 வயது நோயாளிக்கு நுரையீரலில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இம்மருத்துவமனையின் டாக்டர்கள் எக்மோ சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர்.இந்த எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சையானது கோவிட்டுக்கு பிந்தைய சுவாச செயலிழப்புக்கு தமிழகத்தில் முதல் முறையாக செய்யப்பட்ட சிகிச்சையாகும். டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், டாக்டர் ராஜவேல், டாக்டர் சிவசைலம் மற்றும் டாக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு இந்த நோயாளிக்கு சிறந்த சிகிச்சை அளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

நோயாளி கடந்த ஜூலை மாதம் வரை எந்தவிதமான நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். அதற்கு பின் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் 14 நாட்கள் கோவிட்டிற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர்

அவருக்கு கோவிட் இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் 2 வார கோவிட் சிகிச்சையின் பின்னர், அவரது ரத்த ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வந்தது.

மேலும் சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று ஆகியவற்றின் காரணமாக அவர் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார்.

இது குறித்து இம்மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகரும், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியன் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும்போது நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்தது மற்றும் நுரையீரலில் கடுமையான தொற்று காரணமாக ரத்தத்தில் CO2 அளவானது சாதாரண அளவை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் முதுகுபுறத்தில் இருந்து புரோன் வென்டிலேஷன் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. ஆனால் அவரது ஆக்ஸிஜன் அளவு மேம்படவில்லை மற்றும் ரத்தத்தில் PH அளவு 6.688 ஆக குறைந்தது. குறைந்தபட்சம் பிஎச் அளவானது 7.35 முதல் 7.45 வரை இருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்று பிஎச் அளவு குறையும்போது உடல் உறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் டாக்டர் கோவினி கூறுகையில், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியபோதிலும் நோயாளிக்கு தொடர்ந்து குறைந்த ஆக்ஸிஜன் அளவு இருந்ததால், அவர் உயிர் பிழைக்க எக்மோ சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு முடிவு செய்தது. நோயாளி 16 நாட்கள் எக்மோ ஆதரவுடன் இருந்தார். அவரது ஆக்ஸிஜன் அளவுகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டது.

18வது நாளில் அவரது நுரையீரலின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. 20வது நாளில் அவர் குணமடைந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. நோயாளி தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே எக்மோ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கோவிட் சூழ்நிலையுடன் தற்போதைய காலங்களில், மோசமான பல நோயாளிகளை நாங்கள் பார்த்து வருகிறோம். எக்மோ சிகிச்சை மூலம் சிறந்த முடிவுகளைப் பெற மருத்துவ திறன்கள், புரிதல் மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். இது தமிழ்நாட்டில் எக்மோ மூலம் வெற்றிகரமான செய்யப்பட்ட முதல் கோவிட் சுவாச செயலிழப்புக்கான சிகிச்சையாகும் என்று தெரிவித்தார்.

இது குறித்து இம்மருத்துவமனையின் தொற்று நோய் மற்றும் தொற்று கட்டுப்பாடு பிரிவு இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறுகையில், அடிப்படையான சுகாதார நடவடிக்கைகளை கடைபிடித்தாலே கொரோனா தொற்று வராமல் தடுக்கலாம். பல நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் வருவதால் அவர்களுக்கு அதிக அளவில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. எக்மோ போன்ற சிகிச்சைகள் சில நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையாகும். இது அவர்களின் நுரையீரலை குணப்படுத்தி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையைத் தடுக்கிறது என்று தெரிவித்தார்.

அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர்கள் டாக்டர்கள் ராஜவேல் மற்றும் சிவசைலம் ஆகியோர் கூறுகையில், மோசமான கோவிட் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற, சிகிச்சையில் சிறப்பான அணுகுமுறை தேவை. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இதுவாகும். பல்வேறு நிபுணர்கள் குழுவும் துணை மருத்துவர்களும் அவர்களுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்களும் நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் விரைவில் குணமடைந்துள்ளார். 

நோயாளி எக்மோவின்போது ரத்தப்போக்கு, நோய் தொற்று, உளவியல் ரீதியான பிரச்சினை, மன அழுத்தம் போன்ற பல சவால்களை எதிர்கொண்டார். இது நோயாளியின் மீட்புக்கு உறுதுணையாக இருந்த விழிப்புணர்வு குழுவினரால் சிறப்பாக கையாளப்பட்டது என்று தெரிவித்தனர்.

இம்மருத்துவமனையின் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணரும் டாக்டருமான டாக்டர் சுரேஷ் சகாதேவன் கூறுகையில், கடுமையான நுரையீரல் பிரச்சினைக்கு எக்மோவை ஒருபோதும் முதன்மையான சிகிச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை ஒரு மீட்பு சிகிச்சையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட்டுக்கு எக்மோ மூலம் சிகிச்சை செய்ய தீர்மானித்தால் அதற்கான நிபுணத்துவம்மிக்க மருத்துவர்கள் மூலம் அது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

வழக்கமான புற நோயாளிகள் கவனிப்பிலிருந்து பல உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குவதில் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை முன்னணியில் உள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியதிலிருந்து, எங்கள் மருத்துவர் குழு கோவிட் தொற்றுக்கான சிறந்த சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. இது வீட்டு அடிப்படையிலான கோவிட் கவனிப்பில் தொடங்கி எக்மோ சிகிச்சை வரை சிறப்பாக செயல்படுகிறது. இந்த சிறப்பான சாதனைக்கு எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதற்கு ஆதரவு அளித்த அனைத்து ஊழியர்களையும் நான் வாழ்த்துகிறேன் என்று இம்மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் டாக்டருமான அலோக் குல்லர் தெரிவித்தார்.