ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து பாகிஸ்தானில் விபத்து 27 பேர் பலி

பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள கோட் என்ற இடத்தில் இருந்து ரைவாண்ட் என்ற இடத்திற்கு மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பேருந்து ஒன்றில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். மலைப்பாதைகளை கொண்ட  அந்த சாலையில், பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில், 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 69 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 13 பேர் மேல் சிகிச்சைக்காக ராவல்பிண்டி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
பேருந்தில் அளவுக்கதிமாக ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விபத்துக்குள்ளான பேருந்து முதலில் இஸ்லாமாபாத்-லாகூர் சாலை வழியாக செல்வதாக இருந்தது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இரவு 10 மணிக்கு மேல் அத்ந சாலை மூடப்பட்டது. எனவே,  ஓட்டுநர் வேறு வழியாக சென்றுள்ளார். அவருக்கு அந்த மலைப்பாதை பழக்கம் இல்லாததால் அங்கு பள்ளம் இருப்பதை கவனிக்கவில்லை. மேலும், பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு பஞ்சாப் மாகாண முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.