விஷால் வேட்பு மனு நிராகரிப்பு: முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்களா

வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு விஷால் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது.அதற்கு முன்னதாக விஷாலின் பெயரை முன்மொழிந்தவர்களின் இருவர் தங்களுடைய முன்மொழிவை திரும்ப பெற்று விட்டதால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்படி நிராகரிப்பு, ஏற்பு, நிராகரிப்பு என எந்த விதமான நிலைபாடும் அற்று தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது கடும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நிலைபாடுகள் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் சீர்குலைத்து விடும். தேர்தல் வெறும் கண்துடைப்பு என்கிற எண்ணத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய தீங்காக முடியும். எனவே நிராகரிப்பு, ஏற்பு, நிராகரிப்பு என்கிற மாறுபட்ட நிலைபாடுகள் விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு ஆகியவை குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.”