புயல் பாதிப்பு – ஜனவரி 5-க்குள் விண்ணப்பிக்க உத்தரவு

நவம்பர் மாதம் 29-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயலானது தாக்கியது. இதில் அந்த மாவட்டம் கடும் பாதிப்பிற்குள்ளானது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் புயலில் சிக்கி பலியாகினர். காணாமல் போய் கடலில் தத்தளித்துக் கொண்டிக்கும் மீனவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து புயல் சேத பாதிப்புகள் குறித்து பார்வையிட்டனர். இந்த நிலையில் புயலில் சேதமடைந்த படகுகளின் விபரம் குறித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த நவம்பர் மாதம் கன்னியாகுமரியை தாக்கிய ஒக்கி புயலில் சிக்கி சேதமடைந்துள்ள படகுகளின் சேத விபரம் மதிப்பிட உள்ளது.

புயலில் சேதமடைந்த படகுகள் அண்டை மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அதன் சேத விபரமும் மதிப்பிட உள்ளது. இதற்கு உரிய விண்ணப்பத்தினை நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 5-ம் தேதிக்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.