புத்தாண்டு கொண்டாடட்டத்தின் போது 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தை ஒட்டி நேற்று இரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் கூடி இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் இளைஞர்கள் ஆடல் பாடல் கொண்டாட்டங்களை நடத்தினர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், கிழக்கு கடற்கரை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாகனங்களில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மது அருந்தி விட்டு வண்டி ஓட்டியது, வேகமாக வண்டி ஓட்டியது உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் காயாமடைந்துள்ளனர்.

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் 2 பேர் பலியாகினர். கோவையில் சாலை ஓரம் நின்ற வாகனம் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இதேபோன்று சரக்கு ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஈரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது பைக் மோதியதில் சாலையில் சென்ற ஒருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தார். இவ்வாறாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர்பாக காவல் துறை பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் உத்தரவுகள் விடுத்திருந்த போதும் அதனை மீறி இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாலேயே விபத்துகள் ஏற்பட்டுள்ளன.